Skip to content

மட்டன் (கறி) வறுவல்

2012 April 1
Posted by kandageethakavi

தேவையானவை:

மட்டன்  – 1/4 கிலோ

எண்ணெய்  – 3/4 டேபிள் ஸ்பூன்

நைசாக அரைக்க வேண்டியது:

சோம்பு   -   1/4  டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது  -  1/2 டேபிள் ஸ்பூன்

கசகசா  -  1/4 டேபிள் ஸ்பூன் (15 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்)

சின்ன வெங்காயம்  -  5 / 6

தேங்காய்  துறுவல்  -  1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்  -  1/4 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள்  -  1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:

* மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கி (கறிக்கடையில் சொன்னாலே நறுக்கித்தருவார்கள்), அலசி, ஒரு கிண்ணத்தில் கால் டம்ளர் தண்ணீர்  மற்றும் சிறிது மஞ்சளுடன் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். ஆறு விசில் வரை வைக்கலாம்.

* ஸ்டீம் அடங்கியவுடன் வெந்த மட்டன் மற்றும் நீருடன், அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து பிரட்டிய கலவையை சேர்க்கவும்.

* நீர் வற்றும் வரை சற்று குறைந்த தணலில்(medium) வேகவிடவும். நீர் வற்றியவுடன், இன்னும் தணலைக் குறைத்து (sim) அடிக்கடி கிளறி விட்டு, நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

மட்டன் / கறி வறுவல் தயார்.

நன்றி : என் அம்மா


குலாப் ஜாமுன்

2011 December 6
Posted by kandageethakavi

முதன் முதல் குலாப் ஜாமுன் செய்த போது இரண்டு விஷயங்கள் பிழையாகிப் போனது. ஒன்று இனிப்பின் அளவு. மற்றொன்று பாகுப்பதம். இது தான் மிக எளிமையான இனிப்பு வகையான குலாப் ஜாமுனைக் கூட நான் இங்கே குறிப்பிட காரணம்.

விஷயத்திற்கு வருகிறேன்…

MTR, ஆச்சி போன்ற எவர் தாயாரித்த மிக்ஸையும் பயன்படுத்தலாம். எனக்குப் பிடித்தது “ஆச்சி மிக்ஸ்” தான்.

முதலில் பாகு: பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சர்க்கரை அளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவு சர்க்கரை எடுத்துக்கொண்டால் போதும். அதே அளவு நீர் சேர்க்கவேண்டும். உதாரணத்திற்கு 600 கிராம் சர்க்கரை என்றால் 600 மி.லி. நீர் சேர்க்கவேண்டும். இரண்டையும் கலந்து தோராயமாக 15 நிமிடங்கள் சுட வைக்கவேண்டும். கொதித்து, பிசுக்குப் பதம் வரும் பொழுது இறக்கி, தேவைக்கேற்ற அகலமான பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். (பிசுக்குப் பதம் என்பது, பாகினை ஒரு விரலால் தொட்டு, பிடித்துப் பார்த்தால் லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்)

இப்பொழுது உருண்டை: பாக்கெட்டில் கொடுத்திருப்பது போலவே மாவு பிசைந்து உருண்டை பிடித்து எண்ணெயில் பொரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், பொரித்த உருண்டைகளை ஏற்கனவே தயாரித்து வைத்த பாகில் சேர்க்கலாம். ஓரிரவு ஊறவைத்து மறுநாள் பயன்படுத்தினால் சுவை கூடும்.

மேலும் சுவை கூட்ட:

  • மாவு பிசையும் பொழுது நீருக்கு பதிலாக பால் சேர்த்து பிசையலாம். நீரும் பாலும் கலந்தும் சேர்க்கலாம்.
  • மாவு உருண்டைகளை எண்ணெக்குப் பதிலாக நெய்யிலும் பொரிக்கலாம். இல்லையெனில், பாகு செய்து இறக்கப்போவதற்கு முன் மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கலாம்.

நன்றி: என் மரியாதைக்குரிய “good neighbour” ஜனிதா அம்மாவிற்கு.

கேரட் துவையல்

2010 June 12
Posted by kandageethakavi

தேவையானவை:

கேரட் – 2

தேங்காய் துருவல் – ¼ கப்

காய்ந்த மிளகாய் – 4  அல்லது  5  (ருசிக்கேற்ப)

கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – ½ டீ ஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப குறைக்கலாம்)

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • கேரட்டை கழுவி, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • எண்ணெய் காயவைத்து, காய்ந்தமிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • கேரட் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • கடைசியில் பெருங்காயம், புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • ஆறவைத்து சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.

இந்தத் துவையலை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், எலுமிச்சை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

நன்றி: அவள் விகடன்.

சர்க்கரை

2010 June 12
Posted by kandageethakavi

வணக்கம், இது எனது முதல் பதிவு. சமையல் பற்றிய ப்ளாக் என்பதால், கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக்கொள்ளவும் !!!